இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் இந்திய அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இவர் ஆடுவது சந்தேகம் தான்.
கடந்த சில வருடங்களாகவே இங்கிலாந்து அணிக்கு மிக சிறந்த ஆல்ரவுண்டர் ஆக வலம் வரும் பென் ஸ்டோக்ஸ், பல இக்கட்டான சூழ்நிலைகளில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி மன்னனாக இருந்துள்ளார். பேட்டிங் மற்றும் பௌலிங் அல்லது ஏதேனும் ஒன்றிலாவது இவரது பங்களிப்பு அணிக்கு நிச்சயம் இருக்கும்.
இங்கிலாந்து நிர்வாகம் மட்டும் அல்ல, பல முன்னணி லீக் தொடரிலும் இவருக்கு மவுசு அதிகம். குறிப்பாக ஐபில் போட்டிகளில் இவரை ஏலம் எடுக்க பல முன்னணி அணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டன.
இந்திய அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் தொடரில் காயம் காரணமாக விலகி இருந்த பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் தொடரில் குணமடைந்ததால், அணியில் சேர்க்கப்பட்டார். இதில் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் 59 ரன்களும் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், சொந்த விடயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. பிரிஸ்டால் நகரின் தெருவில் நடந்த தகராறு காரணமாக ஸ்டோக்ஸ் மீது வழக்கு போடப்பட்டது.
இதில் திங்களன்று விசாரணை துவங்குகிறது. இது புதன் கிழமைக்குள் முடிப்பது சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாமல் சனி கிழமை 3வது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. ஸ்டோக்ஸ் விசாரணையில் இருந்து விடுபட்டாலும் அவரால் போட்டி துவங்குவதற்குள் பயிற்சியை முடிக்க இயலாது.
விசாரணையில் உறுதி ஆனால், இவரது கிரிக்கெட் தடைகாலம் எவ்வளவு காலம் இருக்கும் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்னும் தெளிவாக கூறவில்லை. வாரியத்தின் தலைமை குழு எடுக்கும் முடிவு தான் இறுதியானது.
இதற்கு முன் ஆஷஷ் தொடரையும் தவற விட்டார்.
இவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட கிறிஸ் வோக்ஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இதனால் பென் ஸ்டோக்ஸ் பற்றி இங்கிலாந்து நிர்வாகம் யோசிப்பது சற்று கடினம் தான்.
நாளை 3வது போட்டிக்கான 13 வீரர்களை இங்கிலாந்து வாரியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.