வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு தனது முழு சம்பளத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
வருகிற டிசம்பர் 1ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் துவங்குகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் சென்று வந்த இங்கிலாந்து அணி ஏழு டி20 போட்டிகளில் விளையாடி 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு அவர்களின் கேள்விகளுக்கு பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்து வந்தார். அதன் பிறகு, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது, பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான முழு சம்பளத்தை அப்படியே பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்பெறுமாறு நன்கொடையாக கொடுப்பதாக அறிவித்தார்.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் பாகிஸ்தானில் மழை பெய்ய துவங்கியது. தொடர்ச்சியாக 40 முதல் 50 நாட்கள் பெய்த இந்த மழையால் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் மக்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்த வெள்ளத்தால் சுமார் 1800 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தற்போது வரை அதிலிருந்து மீளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை கேட்ட பென் ஸ்டோக்ஸ் உடனடியாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் செய்த இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பலரும் இவருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பென் ஸ்டோக்ஸ், “பாகிஸ்தான் நாட்டிற்கு நம்மை எப்படி வரவேற்பார்கள் என்று சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் எந்தவித சிக்கலும் இன்றி மிகவும் இயல்பாக வரவேர்த்தது என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இத்துடன் நிற்கப்போவதில்லை. மீண்டும் ஒருமுறை வருவதற்கு ஆவளுடன் இருக்கிறேன்.” என்றார்.