இந்த ஆண்டு நாம் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி இருப்பதை பார்த்திருப்போம். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிலர் சிறப்பாக விளையாடி போட்டியின் நிலைமையையே மாற்றியுள்ளார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் சிறப்பாக செயல் பட்ட வீரர்களை வைத்து ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியை தயார்படுத்தி உள்ளோம். பாருங்கள்:
ரோஹித் சர்மா
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் சர்மா இந்த ஆண்டில் விளையாடிய 21 ஒருநாள் போட்டிகளில் 1293 ரன் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த ஆண்டு 5 அரைசதம் மற்றும் 6 சதம் அடித்திருக்கும் இவர், அதிகபட்சமாக 208* ரன் அடித்திருக்கிறார்.
உபுல் தரங்கா
இலங்கை அணியின் நட்சத்திர தொடக்கவீரர் உபுல் தரங்கா இந்த ஆண்டில் விளையாடிய 25 போட்டிகளில் 1011 ரன் அடித்துள்ளார். இரண்டு சதம் மற்றும் 6 அரைசதம் அடித்திருக்கும் இவர், அதிகபட்சமாக 119 ரன் அடித்திருக்கிறார்.
விராட் கோலி (கேப்டன்)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் விளையாடிய 26 போட்டிகளில் 1460 ரன் அடித்து, இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். இந்த ஆண்டில் 6 சதம் மற்றும் 7 அரைசதம் அடித்திருக்கும் கோலி, அதிகபட்சமாக 131 ரன் அடித்துள்ளார். இந்த அணிக்கு இவர் தான் கேப்டனாக செயல்படுவார்.
ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் விளையாடிய 19 போட்டிகளில் 983 ரன் அடித்திருக்கிறார், அதில் 2 சதம் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக அவர் 133* ரன் அடித்திருக்கிறார்.
இயான் மோர்கன்
இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் இயான் மோர்கன் இந்த ஆண்டில் 3 சதம் மற்றும் 3 அரைசதம் அடித்திருக்கிறார். விளையாடிய 20 போட்டிகளில் 781 அடித்துள்ள அவர் அதிகபட்சமாக 107 ரன் அடித்துள்ளார்.
எம்.எஸ். தோனி (விக்கெட்-கீப்பர்)
இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் மகேந்திர சிங் டோனி இந்த அணிக்கு விக்கெட்-கீப்பராக செயல் படுவார். இந்திய அணிக்காக முக்கிய நேரங்களில் பேட்டிங்கில் கலக்கும் தோனி, விக்கெட்-கீப்பிங்கில் துவம்சம் செய்கிறார். இவர் விளையாடிய 29 போட்டிகளில் 788 ரன் அடித்திருக்கிறார். 1 சதம் மற்றும் 6 அரைசதம் அடித்திருக்கும் தோனி, பல ஸ்டம்பிங்கும் செய்திருக்கிறார்.
ஹர்டிக் பாண்டியா
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா இந்த ஆண்டில் 29 போட்டிகளில் விளையாடி 557 ரன் அடித்துள்ளார். 4 அரைசதம் அடித்திருக்கும் பாண்டியா, இந்த ஆண்டில் 31 விக்கெட் எடுத்திருக்கிறார்.
ரஷீத் கான்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இந்த ஆண்டில் விளையாடிய 16 போட்டிகளில் 43 விக்கெட்டுகள் எடுத்து அசத்திருக்கிறர். இதனால் இந்த இடத்தை இவர் பிடித்துவிட்டார். இந்த ஆண்டில் ஒரே இன்னிங்சில் 4-விக்கெட்டுகள் இரண்டு முறையும், 5-விக்கெட்டுகள் இரண்டு முறையும் எடுத்திருக்கிறார்.
ஹசன் அலி
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்த ஆண்டில் விளையாடிய 18 போட்டிகளில் 45 விக்கெட் எடுத்திருக்கிறார். போட்டியின் தொடக்கத்திலேயே விக்கெட் எடுப்பது தான் இவரது திறமை.
ஜேஸ்ப்ரிட் பும்ரா
இந்தியாவை சேர்ந்த யார்க்கர் கிங் ஜேஸ்ப்ரிட் பும்ரா இந்த ஆண்டில் 26 போட்டிகளில் 39 விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார். கடைசி நேரங்களில் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதில் இவர் வல்லவர்.
லியாம் ப்ளங்கட்
இங்கிலாந்து அணியில் விளையாடும் லியம் ப்ளங்கட் இந்த ஆண்டில் 18 போட்டிகளில் 36 விக்கெட் எடுத்திருக்கிறார். ஒரே இன்னிங்சில் 4-விக்கெட்டுகள் மூன்று முறையும், 5-விக்கெட்டுகள் 1 முறையும் எடுத்திருக்கிறார். இந்த ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
க்விண்டன் டி காக் (12வது வீரர்)
தென்னாபிரிக்கா அணியின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் க்விண்டன் டி காக் இந்த அணியின் 12வது வீரராக இருப்பார். பேட்டிங் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இவர் அந்த இடத்தை நிரப்புவார். தொடக்கவீரர், நடுவரிசை வீரர் என எந்த இடத்திலும் இறங்கி ரன் அடிக்கும் திறமை உடையவர். 19 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 956 ரன் அடித்திருக்கிறார், அதில் 2 சதம் மற்றும் 7 அரைசதம் அடங்கும்.