வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பிறகு 0-வில் இருந்த அபாயகர பேட்ஸ்மென் டிவில்லியர்ஸுகு தவறுதலாக ரிவியூ கேட்காமல் விட்டு விட்டார் இந்திய கேப்டன் விராட் கோலி.
ஆனால் டிவில்லியர்ஸுக்கு இந்தத் தவறைச் செய்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர் சற்று முன் புவனேஷ்வர் குமார் பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த முறை ஆஃப் ஸ்டம்புக்கு நன்றாக வெளியில் பிட்ச் ஆகி பெரிய இன்ஸ்விங்கர் ஆனது அதனை அடிக்கப் பார்த்தார் டிவில்லியர்ஸ் பந்து இடையில் புகுந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது.
நேற்று புஜாரா இதே போல் 0-வில் இருந்த போது ‘அம்பயர்ஸ் கால்’ என்று நினைத்து டுபிளெசிஸ் எல்.பி.க்கு ரிவியூ கேட்காததையடுத்து அரைசதம் கண்டார் புஜாரா.
இன்று உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னிங்சின் 32-வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீச மணிக்கு 137 கிமீ வேகம் வந்த அந்த சற்றே கூடுதலான இன்ஸ்விங்கர் டிவில்லியர்ஸின் மட்டையைக் கடந்து கால்காப்பைத் தாக்கியது, இந்தப் பிட்சில் உயரம் சந்தேகம் காரணமாக நடுவர்கள் எல்.பி தீர்ப்பை சரியாக வழங்க முடியவில்லை, அதே போல் இதற்கும் நாட் அவுட் என்றே கள நடுவர் தீர்ப்பளித்தார்.
பயங்கரமான முறையீடு எழுந்தும் நடுவர் வாளாவிருந்தார். இதனை ரிவியூ செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தனர் ஆனால் இது அம்பயர்ஸ் கால் அல்ல ஹாக் ஐ ரீப்ளேயில் 3 சிகப்புக் கோடுகளுடன் அவுட் என்றே காட்டியது. கோலி கடுப்பானார், ரவிசாஸ்திரி பெவிலியனிலிருந்து ஒற்றை விரலை உயர்த்தினார்.
இடைவேளைக்கு முன்பாக ஆம்லாவுக்கு இதே போன்ற பந்துக்கு ரிவியூ செய்து தோல்வியில் முடிந்தது, இதனையடுத்தே கோலி ரிவியூ செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கலாம், ஆனால் தப்பிய டிவில்லியர்ஸ் பெரிய இன்ஸ்விங்கரி பவுல்டு ஆனார். விராட்டின் தவறினால் பெரிய பாதிப்பில்லை.