பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் ஸ்டீபன் பிளமிங்
பிக் பாஸ் லீக் தொடருக்கான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளமிங் விலகியுள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடரை போன்று, ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் என்னும் உள்ளூர் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே, பிக்பாஸ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் என்னும் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
கடந்த நான்கு வருடமாக மெல்போர்ன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிளமிங், நேற்று திடீரென தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது திடீர் முடிவு குறித்து பேசிய பிளமிங், இது மாற்றத்திற்கான நேரம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீபன் பிளமிங் மேலும் பேசுகையில்;
மெல்போர்ன்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன், அதன் காரணமாகவே எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். நான் ராஜினாமா செய்வதால் மெல்போர்ன்ஸ் அணிக்கு புதியவர்கள் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். மாற்றங்களே ஒரு அணிக்கு ஊக்கமாகவும், முன்னேற்றமாகவும் இருக்கும்” என்றார்.
தோனி குறித்து பிளமிங்;
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனியை ஐந்தாவது இடத்தில் களமிறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் நான்காவது இடத்தில்தான் டோனி களம் இறங்குவார் என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘டோனி கடந்த சீசனில் அதிகப்படியாக நான்காவது இடத்தில்தான் களம் இறங்கி பேட்டிங் செய்தார். ஆனால், நாங்கள் அவரை கொஞ்சம் வசதிக்கு ஏற்ப முன்ன பின்ன பயன்படுத்திக் கொள்வோம். இருந்தாலும் அவரது இடத்தில் மாற்றம் இருக்காது.
கடந்த 10 மாதங்களாக டோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கேதர் ஜாதவ் போன்ற புதிய வீரர்களை பெற்றுள்ளோம். அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆகவே, பேட்டிங் ஆர்டரில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம்’’ என்றார்.