தம்பி ஹர்திக் பாண்டியா.. கேப்டன்ஷிப் கொடுத்துட்டாங்கன்னு ஜாலியா நினைக்க இது ஒன்னும் ஐபிஎல் கிடையாது – எச்சரித்த முன்னாள் வீரர்!

டி20 கேப்டன் பொறுப்பை அசால்ட்டாக எடுத்துக்கொள்ளாமல் கூடுதல் பொறுப்புடன் ஹர்திக் பாண்டியா இருக்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் சபா கரீம்.

இந்திய அணி வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இலங்கை அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதில் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும், சூரியகுமார் யாதவ் துணைக்கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறார். ஆனால் கேஎல் ராகுல் துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா-விற்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் ஹர்திக் பண்டியாவிற்கு கொடுக்கப்பட்ட இந்த கூடுதல் பொறுப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் பேசப்படுகிறது.

2024 டி20 உலககோப்பையை கவனத்தில் கொண்டு ஹர்திக் பண்டியாவிற்கு இந்த கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. அத்துடன் சில இளம் வீரர்களுக்கும்  வாய்ப்பு கொடுத்திருப்பது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பண்டியாவிற்கு டி20 கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது பற்றி முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

“தேர்வுக்குழுவினர் மிகப்பெரிய முடிவு எடுத்திருக்கின்றனர். 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிக உயரிய பொறுப்பு இது. அவர் அதற்கேற்றார் போல வழிநடத்துவார் என நம்புகிறேன். ஐபிஎல் போன்று கருதிவிட வேண்டாம். அதைவிட கடினமானது. ஒரு பகுதிக்கான அணி இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்கான அணி. இந்தியாவே பார்க்கிறார்கள். ஆகையால் பொறுப்புடன் ஆடவேண்டும்.

அதேபோல் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு, தற்போது இருக்கும் இளம் வீரர்களான இசான் கிஷன், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோரை சுற்றி அணியை உருவாக்க வேண்டும். வரும் கேப்டன்களும் முனைப்பு காட்ட வேண்டும்.”  என்றார்.

Mohamed:

This website uses cookies.