கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கவுதம், 39 பந்தில் சதம் அடித்ததோடு, 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி-20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார்.
கர்நாடக பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட், இப்போது நடந்து வருகிறது. இதில், பல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடு கிறார் கிருஷ்ணப்பா கவுதம். இந்த அணி ஷிவமோகா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் மோதியது. பேட்டிங்கில் களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக விளையாடி 39 பந்தில் சதம் அடித்தார். பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமாக மட்டுமே 106 ரன்களை சேர்த்த அவர், 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார்.
பின்னர் பீல்டிங் செய்யும் போது, 4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். இது டி20 தொடரில் சாதனை. இங்கிலாந்தின் காலின் ஆக்கர்மன் 7 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் கவுதம். இருந்தாலும் இதற்கு ஐசிசி -ஐ அங்கீகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை அடுத்து கவுதமுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தச் சாதனை குறித்து கவுதமிடம் கேட்டபோது, ’இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்றார். ’நீங்கள் அதிகம் ரசித்தது பந்துவீச்சையா, பேட்டிங்கையா?’ என்று கேட்டபோது, ‘’எனது தோழியின் புன்னகை யை’’ என்று கிண்டலாகச் சொன்னார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் இவர் அந்த அணிக்கும் ஒரு சில போட்டிகளை இவ்வாறு அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இப்படி ஒரு அபார ஆட்டத்தை ஆடி உலகில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். ஒரே போட்டியில் சதம் அடித்தும் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் எந்த ஒரு வீரரும் இப்படியான சாதனையை படைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஊடக மற்றும் கிரிக்கெட் வீரர்களான ஆகாஷ் சோப்ரா மற்றும் டீன் ஜோன்ஸ் ஆகியோர் ட்விட்டரில் இவரை பாராட்டியுள்ளனர்..