பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றிக்கு நான் நன்றாக பேட்டிங் செய்தது காரணம் அல்ல, உண்மையில் இந்த வெற்றிக்கு யார் காரணம்? என்பது குறித்து போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் ரோகித் சர்மா குறிப்பிட்டு பேசியுள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு நன்றாக துவக்கம் கிடைத்த போதும் மிடில் ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து, 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 86 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடிக்க இந்திய அணி 30.3 ஓவர்களில் 192 ரன்கள் இலக்கை எட்டி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசியதாவது:
“இன்றைய போட்டியில் இந்திய பவுலர்கள் தான் வெற்றியை பெறுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள். இது 190 ரன்கள் மட்டுமே அடிக்கக்கூடிய பிட்ச் அல்ல. ஒரு கட்டத்தில் 250 ரன்கள் வரும் என்று நினைத்தேன். ஆனால் பவுலர்கள் விடாப்படியாக நின்று இவ்வளவு தூரம் கட்டுப்படுத்தி கொடுத்ததை பெருமிதமாக கருத வேண்டும். யாரிடம் பந்தை கொடுத்தாலும், அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். எங்களிடம் ஆறு வீரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களது முழு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மைதானத்தின் கண்டிஷன் மற்றும் பிட்ச் அந்த நேரத்தில் என்ன ரியாக்ட் செய்கிறது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அதேநேரம் பேட்ஸ்மேன்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இப்போது குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
இது பேலன்ஸ் நிறைந்த அணியாக இருக்கிறது. ஆகையால் இதில் பெரிய குழப்பங்கள் செய்து கொள்ளாமல் இருப்பதே சரி என்று உணர்கிறேன். மூன்று வெற்றிகளை பெற்றிருக்கிறோம். இருப்பினும் எந்த ஒரு ஆரவாரமும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் இது 9 லீக் போட்டிகள், செமி பைனல், அதைத்தொடர்ந்து பைனல் என நிறைய போட்டிகள் கொண்ட டோர்னமெண்ட். கடைசி வரை கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதுவரை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதை அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்வோம்.” என்றார்.