“ஓப்பனா சொல்றேன்” இவரு டீம்ல இல்லாம, இந்திய அணி ரொம்ப வீக்கா இருக்கு – முன்னாள் கோச் கருத்து!

இவர் உலக கோப்பை அணியில் இல்லாததால் எதிரணிகள் கொஞ்சம் தைரியமாக விளையாடுவார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் பாங்கர்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வேகப்பந்து வீச்சில் திகழ்ந்து வந்தவர் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தாண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான  தொடரின்போது காயம் ஏற்பட்டதால் ஓரிரு தொடர்கள் இவரால் விளையாட முடியவில்லை. ஆசியகோப்பை தொடரும் அதில் ஒன்று. அதன் பிறகு குணமடைந்து வந்த இவருக்கு டி20 உலக கோப்பை அணியில் இடம் கொடுத்தனர். மேலும் கூடுதல் பயிற்சிக்காக அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் வாய்ப்பு கொடுத்தனர்.

ஆஸ்திரேலியா தொடரில் பும்ரா இரண்டு போட்டிகள் விளையாடியனார். தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு முன்னர் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதால் விலகினார். அதன்பிறகு இந்திய அணியின் மருத்துவ குழுவினர் இவருக்கு தீவிர சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் பும்ராவால் டி20 உலக கோப்பை தொடருக்குள் குணமடைய முடியாது. இன்னும் கூடுதல் நாட்கள் தேவை என பிசிசிஐ இடம் அறிவிப்பு விடுத்தனர்.

இதனை அடுத்து டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகுகிறார் என பிசிசிஐ அறிவித்தது. காயத்தில் இருந்து குணமடைந்து வந்த பும்ரா மீண்டும் காயமடைவதற்கு முழு முக்கிய காரணம் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தான் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர்.

“பும்ரா சமீபத்தில் தான் காயத்திலிருந்து குணமடைந்து வந்திருக்கிறார். மீண்டும் அவர் காயம் அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதைப் புரிந்து கொண்டு முதல் போட்டியில் விளையாட வைக்கவில்லை. ஆனால் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது என்பதற்காக, இரண்டாவது போட்டியில் அவரை உடனடியாக களம் இறக்கினார்கள். உடல்நிலையை  கருத்தில்கொள்ளவில்லை. அந்த இடத்தில் தான் தவறு நேர்ந்திருக்கிறது. மூன்றாவது போட்டியிலும் அவரை விளையாட வைத்தார்கள். இதன் காரணமாக குணமடைந்து வந்த அவரது காயம் மீண்டும் தீவிரமடைய துவங்கியுள்ளது.

இதை உணர்த்தும் விதமாக தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு முன்பு, முதுகு பகுதியில் வலி ஏற்பட்டு தற்போது அவரால் டி20 உலக கோப்பையில் விளையாட முடியாமல் போனது. பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாததால் எதிரணி பேட்ஸ்மேன்கள் சற்று பதட்டம் இன்றி விளையாடுவார்கள். அவர்களது பேட்டிங் அணுகுமுறையும் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கும். ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் பும்ரா விஷயத்தை அலட்சியமாக கையாண்டு இருக்கிறார்கள்.” என கடுமையாக விமர்சித்தார்.

Mohamed:

This website uses cookies.