கோலி, ரோஹித் யார் சிறந்த கேப்டன்? பஞ்சாயத்து பண்ணும் முன்னாள் ஆஸ்திரேலியா ஜாம்பவான்!!

விராத் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இவர்களில் யார் சிறந்த கேப்டன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாட்ஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. அதன் பிறகு இந்திய அணி நடுவரிசையிலும் பயிற்சியாளர் பதவியிலும் மாற்றங்களை கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து கேப்டன் பொறுப்பிலும் மாற்றம் கொண்டு வருவதற்கு பேச்சுக்கள் அடிபடுகின்றன.

2017ஆம் ஆண்டு தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட பிறகு விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஒரு வீரராக கோலி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், சிறந்த கேப்டனா? என்றால் தற்போது வரை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இவர் தலைமையில் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தற்போது உலக கோப்பை என அடுத்தடுத்து முக்கிய தொடர்களில் இவர் தலைமையில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் விராட் கோலி ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக்-அவுட் சுற்றுகளில் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார். உதாரணமாக, 2015ஆம் ஆண்டு காலிறுதி மற்றும் அரையிறுதி, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி, தற்போது 2019ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி என அனைத்து நாக்-அவுட்களும் சுற்றிலும் இவரது சராசரி 12 க்கும் குறைவாக உள்ளது. இதனால் கோலியின் கேப்டன் சுமையை குறைக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாட்ஜ், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்களில் யார் சிறந்த கேப்டன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறது. ஆனால் விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி ஒவ்வொரு முறையும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கே தடுமாறி வருகிறது. விராட் கோலி ஒரு வீரராக அபாரமாக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாகவே உலகின் நம்பர் ஒன் வீரராகவும் தற்போது வரை இருந்து வருகிறார்.

ஆனால், கேப்டன் பொறுப்பில் அவரது செயல்பாடு சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறது. விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக இல்லாத சமயங்களில், ரோகித் சர்மா தலைமையில், நீதாஸ் கோப்பை, ஆசிய கோப்பை என்ற இரண்டையும் அணிக்காக பெற்றுத் தந்திருக்கிறார்.

கோலி பேட்டிங் மற்றும் பீல்ட்டிங் இரண்டிலும் அசத்துகிறார். மிகவும் ஃபிட்டான வீரராகவும் இருக்கிறார். என்னை பொறுத்தவரை கோலியின் ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் இந்திய அணிக்கு சரியாக இருக்கும்” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.