உலகின் தலைசிறந்த 4 பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்துவரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக், சமகால கிரிக்கெட்டின் சிறந்த 4 ஃபாஸ்ட் பவுலர்கள் யார் என தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகம் முழுதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கிவிட்டது. பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலும் மட்டுமே ஒரே வழி என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. எனவே கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட அனைத்து முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
அதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சில வீரர்கள், ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்துவருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், ரசிகர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் நச்சுனு பதிலளித்துவருகிறார்.
இந்நிலையில், அவரிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த டாப் 4 ஃபாஸ்ட் பவுலர்கள் யார் யார் என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பிராட் ஹாக், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய நால்வரும்தான் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள். இவர்கள் நால்வர் மட்டுமே அனைத்து விதமான ஃபார்மட்டுகளிலும் அசத்தலாக வீசிவருகின்றனர். அதனால் இவர்கள் தான் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.