லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவது சரியா? என்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் பதில் அளித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார். அஷ்வின், அண்மையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். அது மட்டுமில்லாமல் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முன்னேறி இருக்கிறார்.
அஷ்வின் சுமார் 115 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அதேபோல், டி20 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு லிமிடட் ஓவர் போட்டிகளில் இடம் பெறவில்லை. குல்தீப் மற்றும் சஹல் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றனர். அவ்வபோது ஜடேஜாவும் இடம்பெற்றிருப்பதால் அஸ்வினின் இடம் லிமிடெட் ஓவர் போட்டிகளில் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு இந்திய வீரர்கள் பலர் விமர்சனங்களை முன்வைத்து இருந்தாலும், தற்போது ஆஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், அஸ்வின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் பயன்படுத்துவது குறித்து தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்த பதில்,
“அஸ்வின் போன்ற சமயோசித புத்தி கொண்ட வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேவை. ஏனெனில் அவர் ஒரு சில ஓவர்கள் சில தவறுகளை செய்திருந்தாலும், அடுத்த ஓரிரு ஓவர்களில் அதனை சரி செய்து கொண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தும் அளவிற்கு திறன் படைத்தவர். ஐபிஎல் தொடரில் இதனை பலமுறை நாம் அஸ்வினின் பந்து வீச்சில் கண்டிருக்கிறோம். டெஸ்ட் போட்டிகளிலும் சில ஓவர்களில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இருந்தாலும், இக்கட்டான சூழலில் விக்கெட் எடுத்துக்கொடுத்து அணியை முன்னெடுத்து செல்வார். அவரை லிமிடெட் ஓவர் போட்டிகளில் சேர்ப்பதன் மூலம் இந்திய அணிக்கு பேட்டிங்கின் ஆழம் அதிகரிக்கும். அதே நேரம் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தால், களத்தில் நிலைத்து ஆடக்கூடிய அளவிற்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடியவர். முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஆகவும் செயல்பட்டு விக்கெட் எடுக்க உதவுவார் என்பதால் பிசிசிஐ ஆலோசிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.