பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான கே.எல் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் எதிர்காலமாக அறியப்படும் கே.எல் ராகுல் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த தொடரில் விளையாடி வந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பாதைக்கு திரும்பியதால் எஞ்சியுள்ள போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் பஞ்சாப் அணி சவாலாக திகழும் என எதிர்பார்கப்பட்டது.
ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுக்கும் விதமாக அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான கே.எல் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.எல் ராகுல் நேற்று இரவு திடீரென வயிறு வலியால் துடித்ததாகவும், அவருக்கு கொடுக்கப்பட்ட முதலுதவிகள் எதுவும் எடுபடாததால், மருத்துவகள் அறிவுறுத்தலின் பேரில் கே.எல் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதே போல் கே.எல் ராகுலுக்கு அப்பெண்டிக்ஸ் பிரச்சனை இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கே.எல் ராகுல் எப்போது திரும்புவார் என்பது தெரியாததால், பஞ்சாப் அணியின் தற்காலிக கேப்டனாக மாயன்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.எல் ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வந்த கே.எல் ராகுல் ஓரிரு போட்டியில் விளையாடவில்லை என்றாலும் அது நிச்சயம் பஞ்சாப் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.