குருனால் பாண்டியாவை தொடர்ந்து மேலும் இரண்டு வீரர்களுக்கு கொரோனா… இங்கிலாந்து தொடருக்கு பிரச்சினை?

இந்திய அணி இலங்கை அணியுடன் முதல் டி20 போட்டி விளையாடி முடித்த பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசோதனையின் போது குருனால் பாண்டியாக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன் காரணமாக அவரை தனிமைப்படுத்தி அவருக்கு உரிய சிகிச்சையை இலங்கை கிரிக்கெட் வாரியம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடன் நெருங்கி இருந்த 8 வீரர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளார்கள்.

அந்த 8 வீரர்கள் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, இஷன் கிஷன், மனிஷ் பாண்டே, தீபக் சஹர், கிருஷ்ணப்ப கவுதம் மற்றும் சஹால். இதில் தற்பொழுது கிருஷ்ணப்ப கவுதம் மற்றும் சஹால் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் மற்றொரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தகுந்த சிகிச்சையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

8 வீரர்கள் இல்லாத காரணத்தினால் மற்ற வீரர்களை வைத்து நேற்று மற்றும் முன்தினம் இரண்டு போட்டிகள் அடுத்தடுத்த நாட்களில் நடத்தப்பட்டன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் மற்ற 2 ஆட்டத்திலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக 2-1 என்கிற கணக்கில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 வீரர்களும் இந்தியா திரும்ப சற்று தாமதமாகும்

மற்ற வீரர்கள் அனைவரும் தற்போது இந்தியாவுக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த எட்டு வீரர்களும் இவர்களுக்கு உரிய தனிமை காலம் முடிக்கப்பட்டு பின்னர் மீண்டும் பரிசோதனை இவர்களுக்கு எடுக்கப்படும்.

பரிசோதனையில் இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை ( நெகட்டிவ் ) என்று முடிவு வரும் பட்சத்தில் மீண்டும் இவர்கள் இந்தியா திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவர்கள் அனைவரும் இன்னும் பத்து நாட்களுக்கு இலங்கையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போன சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்தி ஷா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அவேஸ் கான் ஆகிய வீரர்கள் காயமடைந்தனர் காரணத்தினால், இவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்தி ஷா இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட வைக்க முடிவு செய்திருந்தது. ஆனால் இவர்கள் இருவரும் தற்பொழுது இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இங்கு இவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்று மேலும் பத்து நாட்களுக்கு மேல் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏறக்குறைய 3 முதல் 4 வாரங்களுக்கு இவர்களால் கிரிக்கெட் விளையாட முடியாது. எனவே முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இவர்களால் நிச்சயமாக விளையாட முடியாத சூழ்நிலை காரணமாக வேறு கிரிக்கெட் வீரர்களை இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.