விராட்கோலி, தோனி இல்லை.. இந்தகால கிரிக்கெட்டில் இந்த இந்தியர் தான் எனக்கு மிகவும் பிடித்தவர் – விண்டீஸ் ஜாம்பவான் லாரா!
இன்றைய காலகட்ட கிரிக்கெட் வீரர்களில் இவர்தான் என் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் என தெரிவித்துள்ளார் விண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா.
இன்றைய கால கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து ஜோ ரூட் ஆகியோர் மத்தியில் யார் சிறந்த வீரர்கள் என்ற விவாதம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இந்த கேள்வி தொடர்ந்து பலதரப்பட்ட ரசிகர்களிடமும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் ஆகியோருடன் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஏற்பட்ட தீ விபத்திற்காக நிதி சேர்க்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற விண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் ஜாம்பவான்களுக்கு மத்தியிலான சாலை பாதுகாப்பு கிரிக்கெட் சீரியசில் பங்கேற்ற லாரா விண்டீஸ் அணி சார்பில் விளையாடினார்.
இவர் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியின்போது, தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது “தற்போதைய கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுக்கு பிடித்தமானவர் யார்?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன் ஆகியோரில் ஒருவரைத்தான் கூறுவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் புதிய பதிலை அளித்தார் பிரைன் லாரா.
அவர் கூறியதாவது, “நான் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டி20 போட்டிகளில் ஆடி வருவதை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதேநேரம் ஸ்மித், வில்லியம்சன், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆனால் அவர்களை விட எனக்கு மிகவும் பிடித்தமானவர் இந்திய வீரர் கேஎல் ராகுல் தான். அவரின் நேர்த்தியான ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது” என பதிலளித்தார்.