பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு, இந்திய அணி நிச்சயம் முழுமையாக தயாராக இருக்கும் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ரோகித் சர்மா.
டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று இருக்கிறது. இரண்டு பயிற்சி ஆட்டங்களை முடித்து விட்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கும் முன்பு மேலும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது.
தற்போது உலக கோப்பை தொடரில் தகுதி சுற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது முடிந்தவுடன் சூப்பர் 12 சுற்று வருகிற அக்டோபர் 22ஆம் தேதி துவங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியை 23ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்தவுடன் கலகலப்பான நிகழ்வுகளும் நடந்து முடிந்திருக்கிறது.
அதற்குப் பின்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒவ்வொரு அணிகளின் கேப்டனும் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தனர். ரோகித் சர்மா தனது பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, அவரிடம் ‘பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு இந்திய அணி எப்படி தயாராகி வருகிறது? யார் அணியின் முக்கிய வீரர் ஆக இருப்பார் என எதிர்பார்க்கிறீர்கள்?’ ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நிதானமாக பதில் அளித்த அவர்,
“மிடில் ஆர்டர்களில் சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு எக்ஸ்-ஃபேக்டராக இருக்கிறார். அவரால் மிடில் ஆர்டரில் வெகுவாக ரன் குவிக்க முடிகிறது. மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய அளவிற்கு அவரால் பங்களிப்பை கொடுக்க முடியும்.
வீரர்களின் காயம் சற்று வருத்தத்தை தருகிறது. அதற்காக உலகக்கோப்பை போன்ற தொடரில் இல்லாத ஒருவரை நினைத்து யோசித்துக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு மாற்று வீரராக வேறு சிலர்கள் இருக்கின்றனர். அவர்கள் அந்த பங்களிப்பை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணி முழுமையாக தயாராக இருக்கும். வீரர்களின் பயிற்சியை தீவிரமாக கவனித்தேன். முழு முனைப்புடன் பயிற்சி செய்கிறார்கள். மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது.
பிளேயிங் லெவன் தற்போதே தயாராகிவிட்டது. கடைசி நேரத்தில் யார் இருப்பார்? யார் இல்லை? என்ற குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆகையால் தற்போதே யார் இருப்பார் என்று அவரவர்களுக்கு தெரிந்துவிட்டது. வீரர்களும் அதற்கு ஏற்றவாறு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்றார்.