போட்டாபோட்டி போட்ட பெரிய தலைகள்… கடப்பாரை அணியில் இன்னொரு கடப்பாரை வீரரை 17.50 கோடிக்கு எடுத்தது மும்பை இந்தியன்ஸ்!

ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் 17.5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான சிறிய அளவிலான ஏலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேமரூன் கிரீன் ஆகியோர் அதிக விலைக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார்போல சாம் கர்ரன் 18.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்று இருக்கிறார். அடுத்த அதிகபட்சமாக 13.25 கோடி ரூபாய்க்கு ஹாரி புரூக்சை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடரில் அபாரமாக விளையாடினார். துவக்க வீரராக களமிறங்கி இரண்டு அரைசதங்களையும் அடித்து இருந்தார். இவரை எடுப்பதற்கு துவக்கத்தில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

7 கோடி வரை ஏலம் கேட்ட பெங்களூர் அணி பின்னர் விலகிக் கொண்டது. அடுத்ததாக டெல்லி மற்றும் மும்பை இரு அணிகளுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி இறுதிவரை நிலவியது.

17.25 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்ட டெல்லி அணியை தாண்டி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் தட்டி தூக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த ஏலத்தில் சுமார் 15.75 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டார் இஷான் கிசான், அதுதான் மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதை முறியடித்து 17.5 கோடி ரூபாய்க்கு கேமரூன் கிரீன் எடுக்கப்பட்டிருக்கிறார்.

வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் இவர் அசத்துவதால் வருகிற ஐபிஎல் தொடரில் நிச்சயம் நல்ல பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஷஸ் தொடர் வருவதால், கேமரூன் கிரீன் இருப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் நிலவியது. அந்த நேரத்தில், நிச்சயம் கேமரூன் கிரீன் ஐபிஎல் ஏலத்தில் இருப்பார் என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று 17.5 கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார் கேமரூன் கிரீன்.

Mohamed:

This website uses cookies.