எம்எஸ் தொனியா? நானா? யார் வேகத்தில் சிறந்தவர்கள் – பதிலளித்த தென்னாபிரிக்கா முன்னணி வீரர்.
தோனியைவிட நன்றாக வேகத்தில் அசத்துவேன் என கூறியுள்ளார் தென்னாபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் டி20 லீக் தொடரில் பங்கேற்று வருகிறார். சென்ற ஆண்டு பெங்களூர் அணிக்காக எடுக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக பாதியிலேயே விலகினார்.
இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக பெங்களூரு அணியில் தக்க வைக்கப்படாமல் இருந்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில் இவரது ஆரம்பவிலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முதலில் இவரை ஏலத்தில் விடும்பொழுது, 2 கோடி ரூபாய் என்பதாலும், இவரது வயது மற்றும் உடல்தகுதி காரணமாகவும் யாரும் எடுக்க முன்வரவில்லை. விற்கப்படாமல் இருந்த பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், மீண்டும் விருப்பம் உள்ளவர்கள் எடுக்கலாம் என ஏலத்திற்கு விடப்பட்டார். அப்போது, பெங்களூரு அணி ஆரம்பவிலைக்கே மீண்டும் இவரை எடுத்தது.
இந்நிலையில், நேற்று சில மணி நேரம் தனது ட்விட்டர் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டெயின். அதில், “ப்ரீ ஆக இருக்கிறேன். உங்களது கேள்விகளை கேட்கலாம். பதில் அளிக்க தயார்” என பதிவிட்டார்.
அதில் ரசிகர் ஒருவர், “தோனியுடன் ஒட்டப்பந்தயம் வைத்தால், அவரால் உங்களை பிடிக்க முடியுமா?” என கேட்டார். இதற்கு பதில் அளித்த ஸ்டெயின், “நிச்சயம் அவரால் முடியாது” என்றார்.
மேலும் சில சுவாரஷ்யமான கேள்விகளுக்கும் ஸ்டெயின் பதில் அளித்தார்.