உலகின் மிகச்சிறந்த வீரர் இவர் தான்; வெளிநாட்டு வீரரை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகனான பென் ஸ்டோக்ஸ் தான் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இங்கிலாந்து அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் பென் ஸ்டோக்ஸ், தற்பொழுது நடைபெற்று வரும் விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கூட மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
இந்தநிலையில், பென் ஸ்டோக்ஸ் தான் சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் குறித்து கம்பீர் பேசியதாவது;
சமகால கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸுடன் வேறு எந்த வீரரையும் ஒப்பிட்டு கூட பார்க்க முடியாது, என்னை பொறுத்தவரையில் வேறு எந்த வீரராலும் எட்ட முடியாத உயரத்தில் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். இந்திய வீரர்கள் உள்பட உலகின் எந்த கிரிக்கெட் வீரரையும் நம்மால் பென் ஸ்டோஸுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. டி.20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பென் ஸ்டோக்ஸிற்கு நிகர் அவர் மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார்.