விராட் கோலி ஒருவரை மட்டுமே தோல்விக்கு காரணம் என கூற முடியாது என அவருக்கு சப்போர்ட் செய்யும் விதமாக பேசி இருக்கிறார் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அதிக ரன்களை விட்டுக்கொடுத்து தோல்வியை தழுவியது. இதனால் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு மீண்டும் ஒருமுறை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெளியேறியதால் லிமிடெட் ஒவர் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு வகித்தால் நன்றாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து இருப்பதால் நிச்சயம் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும்; விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து இருக்கின்றன.
இந்நிலையில் விராட் கோலிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “என்னைப் பொறுத்தவரை கேப்டன் பொறுப்பு விராட் கோலியின் பேட்டிங் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஏனெனில் அவர் பல செலஞ்சுகளை துணிச்சலாக எதிர்கொள்ள கூடியவர். ரோகித் சர்மாவும் அணியை நல்லவிதத்தில் வழிநடத்தி நாம் கண்டிருப்போம். இருப்பினும் தற்போது கேப்டன் பொறுப்பை மாற்றுவதற்கான அவசியம் எதுவும் இல்லை. கே எல் ராகுல் அணிக்கு நல்லவிதமாக பங்களித்து வருகிறார்.
அதேநேரம் மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து ஒரு அணியாக செயல்பட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும். அனைத்து பொறுப்பையும் விராட் கோலி தலையில் கட்டுவது சரியானது அல்ல. மற்ற வீரர்களின் செயல்பாடு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அணியில் மற்ற வீரர்களும் நன்றாக செயல்படும் பட்சத்தில் விராட் கோலி மீது இருக்கும் அழுத்தம் சற்று குறைந்து எந்தவித அழுத்தமும் இன்றி அவரால் நன்கு பேட்டிங் செய்ய முடியும்.” என பேசியிருந்தார்.
ஹர்பஜன் சிங் இந்த பேட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் குறித்தும் அவரை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசியிருக்கிறார்.