CEAT நிறுவனத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஹர்மன்ப்ரீத் கவூர்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவூரை, பிரபல CEAT நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
2017ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பையில் இந்திய பெண்கள் அணி இறுதி போட்டி வரை சென்றதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். இவரது அபார பேட்டிங் திறமைக்கான ரசிகர்களை விட இவரின் அழகிற்காக அவரது ரசிகர்களாக மாறியவர்களே ஏராளம் என்று கூறலாம்.
என்ன தான் பெண்களும் நாட்டிற்காக விளையாடி பல்வேறு தொடர்களை வெற்றிகரமாக கைப்பற்றினாலும், ஆண்கள் அணிக்கு கிடைக்கும் அங்கிகாரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது.
ஆம், முதல் முறையாக ஹர்மப்ரீத் கவூரை பிரபல டயர் நிறுவனமான CEAT நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்படும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் கவூர் பெற்றுள்ளார்.
இந்திய ஆண்கள் அணியில் ரஹானே, ரோஹித் சர்மா உள்ளிட்ட முண்ணனி வீரர்கள் ஏற்கனவே CEAT நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அந்நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட பேட்டையே பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் ஹர்மன்ப்ரீத் கவூரும் இணைந்துள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விசயம் தான்.
இது குறித்து ஹர்மன்ப்ரீத் கவூர் பேசியதாவது “இது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம், நான் இதனை நினைத்து கூட பார்த்து இல்லை. சென்ற ஆண்டை போன்று இந்த வருடமும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.