விளையாடிய 14 சீசன்களில் 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் இருந்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் மகேந்திர சிங் தோனி.
இந்த வருட ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது. தனது கடைசி லீக் போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திலும் சிஎஸ்கே அணி இருந்தது.
இதனையடுத்து களமிறங்கி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் டெல்லி அணியை 146 ரன்களுக்குள் சுருட்டி 77 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியையும் சிஎஸ்கே அணி பதிவு செய்தது. இதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதோடு இரண்டாவது இடத்தை பிடித்து முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் பெற்றுள்ளது.
சிஎஸ்கே அணி 14 சீசன்ங்களில் விளையாடி 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இத்தகைய வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே திகழ்ந்து வருவதற்கு என்ன காரணம் என்று போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்து தோனியிடம் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் கூறிய தோனி,
“இதற்கு எங்களிடம் எந்த பார்முலாவும் இல்லை. சிறந்த வீரர்களை எடுத்து, அவர்களுக்கு எது சிறந்த இடம் என்று தெரிந்து அங்கே விளையாட வைக்கிறோம். சில இடங்களில் அவர்களுக்கு பலவீனம் இருக்கும். அதைக் கண்டறிந்து சரி செய்ய முற்படுகிறோம். மேலும் அணியில் சிலர் தங்களது இடத்தை மாற்றி வேறொரு இடத்திற்கு விளையாடும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக குறிப்பிட்ட வீரர்கள் தயாராகவும் தியாக உணர்வுடன் இருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேல் அணி நிர்வாகிகளுக்கு இந்த பெருமிதம் சென்றடையும்.
சிஎஸ்கே அணியை பொருத்தவரை வீரர்களுக்கு தான் முன்னுரிமை. வீரர்கள் இல்லாமல் இங்கு வேறு எதுவும் செய்துவிட முடியாது. ஆகையால் வீரர்களுக்கு முழு கவனமும் செலுத்தப்படுகிறது. இந்த சீசனில் கூட இளம் வீரர்கள் விளையாடுகின்றனர். அவர்களுக்கு பொருந்தாத இடத்திலும் விளையாட வைக்கப்படுகின்றனர். அதை அவர்கள் வளர்த்துக்கொள்ள முனைந்து நன்றாக செயல்படுகின்றனர்.” என்றார்.