“ஆர்சிபி அணியினர் எனக்கு சொன்னது ஒன்று. ஆனால் செய்தது வேறு. இப்படி அவர்கள் செய்வார்கள் என்று நான் துளியும் நினைக்கவில்லை. எனக்கு நடந்ததெல்லாம் நன்மைக்கே என்று ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறேன்.” என உருக்கமாக பேசியுள்ளார் சஹல். உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். அவற்றை பின்வருமாறு காண்போம்.
2014 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணிக்காக 10 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டவர் யுசுவேந்திர சகல், ஆர்சிபி அணியில் தொடர்ந்து எட்டு வருடங்களாக பயணித்து 113 போட்டிகளில் 139 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆர்சிபி அணியின் லெஜெண்டாக உருவெடுத்திருக்க வேண்டியவர் ஆவார்.
ஆனால் இவரைப் போன்ற வீரரை 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுக்க தவறியது ஆர்சிபி அணி தரப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. 2022 ஐபிஎல் சீசனில் 27 விக்கெட்டுகள், நடந்து முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் 21 விக்கெட்டுகள் என பின்னி பெடலெடுத்து விட்டார் சஹல்.
சஹலை ஏலத்தில் எடுக்காததற்கு ஆர்சிபி அணியின் தரப்பு உரிய விலையை கொடுத்தது தெளிவாகவே தெரிந்தது. இந்நிலையில் ஆர்சிபி அணி தனக்கு வாக்குறுதி அளித்தது என்ன? தனக்கு செய்த துரோகம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டிகள் பகிர்ந்துள்ளார் யுஸ்வேந்திர சஹல்.
“ஆர்சிபி அணிக்காக கிட்டத்தட்ட 120 போட்டிகளில் விளையாடியுள்ள நான் எட்டு வருடங்களாக அவர்களுடன் பயணித்தேன். ஏலத்திற்கு முன்பு கட்டாயம் என்ன விலைக்கு சென்றாலும் நாங்கள் எடுப்போம் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் சொன்னதைப் போல நடந்து கொள்ளாதது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது. எனக்கு ஆர்சிபி தரப்பு மீது அதீத கோபம் ஏற்பட்டுவிட்டது.
என்னை ஏன் எடுக்கவில்லை என்பது குறித்து உரிய முறையில் தொடர்பு கொள்ளவும் இல்லை. சின்னசாமி மைதானம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த மைதானம். ரசிகர்கள் மத்தியில் நான் விளையாடுவதை பெருமிதம் ஆகவே கருதி வருகிறேன்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஆர்சிபி அணியில் இருந்தபோது என்னை 16 ஓவர்களுக்குள் பயன்படுத்தி முடித்து விடுவார்கள். ஆனால் இப்போது ராஜஸ்தான் அணியில் டெத் ஓவர்களிலும் பௌலிங் செய்கிறேன். தனிப்பட்ட கிரிக்கெட் கெரியரில் நான் என்னை நன்றாக வளர்த்துக் கொண்டுள்ளேன். எனக்கு எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். ஆர்சிபி அணியில் எடுக்கப்படாததும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று வருத்தத்துடன் உணர்கிறேன்.” என்றார்.