இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கைகளும் அதிகரித்து கொண்டே போகிறது.மக்கள் மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி தவித்து வருகின்றனர். உலக நாடுகளில் இருந்து அனைவரும் இந்திய மக்களுக்கு தற்பொழுது உதவிகள் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பிரபல நட்சத்திரங்களும் தொழிலதிபர்களும் இந்திய மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வேளையில் கிரிக்கெட் வீரர்களும் சில கிரிக்கெட் அணிகளும் இந்திய மக்களுக்கு உதவி புரிந்து கொண்டு வருகின்றனர். பேட் கம்மின்ஸ், விராட் கோலி, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்திய மக்களுக்கு நிதி உதவி செய்துள்ளனர். அதைப்போல ஐபிஎல் அணிகள் ஆன மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சில உதவிகளை செய்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவி புரிந்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கிய காசி விசுவநாதன்
இந்நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிறுவனர் காசிவிஸ்வநாதன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து பூமிகா டிரஸ்ட் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக மக்களுக்கு இலவசமாக தருவதாக கூறி ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்தார். மேலும் ஸ்டாலினை சந்தித்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைதளங்களில் பதிவிட்டது.
இதுகுறித்து பேசியுள்ள காசி விஸ்வநாதன் தமிழக மக்கள் தற்பொழுது இக்கட்டான நிலையில் உள்ளனர் அவர்களுக்கு நிச்சயமாக உதவி தேவைப்படுகிறது. எல்லோரும் தங்களால் முடிந்த வரையில் உதவி செய்துகொண்டு இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுடன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை சென்னை அணி நிர்வாகம் சார்பாக வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் காசிவிஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அணி நிர்வாகம் செய்த இந்த உதவியை அனைத்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். மேலும் இதே போல் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.