இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த குட்டி தல ரெய்னா; வாழ்த்து தெரிவித்தது சி.எஸ்.கே
யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததன் காரணமாக இங்கிலாந்து அணியுடனான தொடரில் இருந்து விலகிய அம்பத்தி ராயூடுவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ரெய்னாவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20,மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், முகமது சமி, அம்பத்தி ராயுடு ஆகியோர் தங்கள் உடல்தகுதியை நிரூபிக்கும் யோ-யோ சோதனையில் வெற்றி பெற தவறினர்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு, உடல் தகுதியை நிரூபிக்க தவறியதால், யோ – யோ சோதனையில் வெற்றி பெற்றிருந்த சுரேஷ் ரெய்னா ராயுடுக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு பிறகு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள சுரேஷ் ரெய்னாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சுரேஷ் ரெய்னாவிற்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளது.
31 வயதான ரெய்னா கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டிக்கு அணிக்கு திரும்புகிறார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூலை 12-ந்தேதி நாட்டிங்காமில் நடக்கிறது.
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி, தோனி, ஷிகர் தவான், ரோஹித் சம்ரா, கே.எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ஹர்திக் பாண்டியா,சித்தார்த் கவூல், உமேஷ் யாதவ்.