இந்திய அணியின் பேட்ஸ்மனான புஜாரா தற்போதைய இந்திய அணியின் கோட்ச் ரவிசாஸ்திரியால் தான் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மனான புஜாரா மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவர் நான்கு போட்டிகளில் பங்கேற்று 271 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் மூன்று அரை சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிகமான ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில். இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். அந்த அளவுக்கு இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
இவர் 4 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் சேர்த்து 928 பந்துகளை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பவுளர்களாகிய பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயான் ஆகியவர்களை மிகச்சிறப்பாக கையாண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்ஸ்க்கு எதிராக இவரின் ஆவரேஜ் 75 ஆகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் புஜாரா சற்று திணறினார். பின் நிலைமையை உணர்ந்து கொண்ட அவர் மிக சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணி பவுலர்களை சிதறடித்தார். இதுபற்றி அவர் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்து பேட்டியில் அவர் கூறியதாவது,
”நான் எனது மனதை அந்தப் போட்டிக்காக தயார் படுத்தினேன். இக்கட்டான நிலையில் நான் மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும் என்று நான் என்னிடமே கூறிக்கொண்டேன்.
நாம் செய்வதற்கு நிறைய வேலை உண்டு என்று சொல்லிக் கொண்டேன். பின் எனது பேட்டிங் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்களிடம் சென்று பேசினேன். அவர் என்னுடைய பேட்டிங் சீராக உள்ளதாக கூறி ஆதரவாகப் பேசி எனக்கு ஊக்கம் அளித்தார். நான் நிதானமாக ஆடுவதில் மட்டுமே எனது கவனத்தை வைத்தேன்” என்று புஜாரா கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது “இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே எனக்கு சில அறிவுரை கூறினார். அதில் அவர் கூறியதாவது 2017 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டோமோ அதே போன்று மீண்டும் செயல்படுமாறு அவர் கூறினார். அதன் காரணமாகத்தான் நான் நாதன் லயன் பந்தை எளிதாக கையாள முடிந்தது” என்று அவர் கூறினார்.