இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் குறித்து தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியதாவது
ரிஷப் பன்ட் தொடர்ந்து போட்டிகளில் ஆடி வருகிறார் நாங்கள் பல வீரர்களுக்கு அவர்களது வேலை பளு காரணமாக ஓய்வு கொடுத்து வருகிறோம். 21 வயதான அவர் தொடர்ந்து பல டி20 போட்டிகளில் ஆடினார். தற்போது கடுமையான 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளா.ர் அவர் உடல் பல காயங்களை எடுத்திருக்கும். அவருக்கு சிறுசிறு பிரச்சினைகளும் உள்ளது. அவர் மீண்டும் வர அவருக்கு ஓய்வு தேவை. இதனால் அவருக்கு ஓய்வு கொடுத்தோம் என்று கூறியுள்ளார் எம்எஸ்கே பிரசாத்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலிருந்தும், நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸி. தொடருக்கு முகமது சிராஜும், நியூஸி. தொடருக்கு சித்தார்த் கவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பெருமளவும் பங்குள்ளது. குறிப்பாக இந்தத் தொடரில் பும்ரா மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் 157 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். சராசரி 17.
பும்ராவுக்கு அதிக வேலை பளு இருப்பதால், இந்தியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடரை மனதில் வைத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், தனது கடைசி ரஞ்சிக் கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் தரப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். சித்தார்த் கவுல் நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் தரப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
ஜனவரி 12-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது. ஜனவரி 18 வரை இந்தத் தொடர் நடக்கும். இதன் பின் இந்திய அணி நியூஸிலாந்து நாட்டுக்குச் சென்று, அந்த அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.