கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என அதிரடி வீரர் கிரிஸ் கெய்ல் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரிந்த அதிரடி வீரர்கள் யார் யார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் யாரிடம் கேட்டாலும், அந்த பட்டியலில் கிரிஸ் கெய்லின் பெயர் இடம்பெறாமல் இருக்காது. தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த கிரிஸ் கெய்ல், 41வயதை எட்டிவிட்ட போதும் இதுவரை ஓய்வை அறிவிக்காமல் மாஸ் காட்டி வருகிறார்.
ஐபிஎல் போன்ற தொடர்களில் கிரிஸ் கெய்ல் என்னதான் அதிரடியாக விளையாடினாலும், அவரை வயதை காரணமாக வைத்து, கிரிஸ் கெய்ல் ஏன் ஓய்வை அறிவிக்க மறுக்கிறார், இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தானாக விலகி கொள்வதே ஒரு நல்ல வீரனுக்கு அழகு என்று அவர் மீது சில விமர்ச்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கிரிஸ் கெய்ல் இந்த ஆண்டாவது ஓய்வை அறிவிப்பாரா என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஓய்வை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கிரிஸ் கெய்ல் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கிரிஸ் கெய்ல் பேசுகையில், “இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று முழுமையாக நம்புகிறேன். 45 வயதுக்கு முன்னர் கிரிக்கெட்டிலிருந்து விலக வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்தவரையில் வயது என்பது வெறும் எண் மட்டுமே. இன்னும் இரண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கிரிஸ் கெய்ல், இந்தியாவில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தொடர் ஆகியவற்றில் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.