நான் இல்லை என்றால் ஐபிஎல் இல்லை : மனதை தேற்றும் கிறிச் கெய்ல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி சதத்தால் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப்- ஐதராபாத் அணிகள் மோதின. மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ராகுல் 18 ரன்கள் எடுத்தபோது ரஷித்கான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 18 ரன்களில் பெவிலியன் திரும்ப அதிரடியில் இறங்கினார் கெயில். ஐதராபாத்தின் டாப் பந்துவீச்சாளரான ரஷித் கானின் பந்தை பின்னி பெடலெடுத்தார் கெயில். 14-வது ஓவரை வீசிய ரஷித் பந்தில் தொடர்ந்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். இந்த அதிரடியில் நொந்தே போய்விட்டார் ரஷித்.

இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காத ஒரே ஐதராபாத் பந்துவீச்சாளர் அவர்தான். அவர் பந்தை கெயில், சின்னாபின்னமாக்கியது அந்த அணிக்கு ஆச்சரியமளித்தது. ரஷித்கான், 4 ஓவர்களில் 55 ரன்களை வாரி வழங்கினர். அவரது மோசமான பந்துவீச்சு இது.

கெயிலை கட்டுப்படுத்த ஐதராபாத் கேப்டன் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அபாரமாக ஆடிய அவர், 58 பந்துகளில் தனது 6-வது ஐ.பி.எல். சதத்தை நிறைவு செய்தார். இந்த ஐ.பி.எல். போட்டியில் இதுதான் முதல் சதம். அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த கருண் நாயர், 31 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. கெயில் 63 பந்துகளில் 104 ரன்களுடனும் ஆரோன் பின்ச் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், பந்து தாக்கியதால் ’ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி, வந்த வேகத்திலே பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் (54), மனிஷ் பாண்டே (57) இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

சாஹா 6 ரன், யுசுப் பதான் 19 ரன்களுக்கு மொகித் சர்மா பந்தில் போல்டானார்கள். அதைத் தொடர்ந்து மணிஷ் பாண்டே களமிறங்கினார். 54 ரன்கள் எடுத்த நிலையில் சிறப்பாக ஆடிய கேப்டன் வில்லியம்ஸன் ஆன்ட்ரு டை பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த தீபக் ஹூடா 5 ரன்களில் வீழ்ந்தார்.

இருந்தாலும் அதிரடியாக யாரும் விளையாடததால் தேவையான ரன்னை அவர்களால் எடுக்க முடியவில்லை. தவான் இருந்திருந்தால் போட்டி மாறியிருக்கலாம். எனினும் 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது ஐதராபாத். இதன் மூலம் தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஐதராபாத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது பஞ்சாப்.

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் டேவிட் வார்னர் இருந்திருந்தால் மிரட்டியிருப்பார் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருந்தனர். அதை உணர்த்தும் விதமாக அவர் பற்றி எழுதிய அட்டைகளை காண்பித்தபடி இருந்தனர்.

அதிரடி சதம் விளாசிய கிறிஸ் கெய்ல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Editor:

This website uses cookies.