ஆஸ்திரேலியா அணியின் நடத்தையில் கடும் மாற்றங்களுக்காக ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் கையையும் வாயையும் கட்டிப் போட்டது போல் ஆகிவிட்டது. இது அணியின் வெற்றியைப் பாதிப்பதாக கிளார்க், ஷேன் வார்ன் உள்ளிட்டோர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கிளார்க் ‘கடினமான கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக ஆடுவதுதான் ஆஸி. ரத்தத்தில் உள்ள கிரிக்கெட், அடுத்தவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்று ஆடினால் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாது’ என்று சாடியிருந்தார்.
அதாவது பால் டேம்பரிங் விவகாரத்தை தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஸ்விங் பவுலர் ஃபானி டிவிலியர்ஸ் தான் பணியாற்றும் தொலைக்காட்சிக்காக அம்பலப்படுத்தினார், இதில் பேங்கிராப்ட் உப்புக் காகிதத்தினால் பந்தை பலமுறை தேய்த்தது தொலைக்காட்சி கேமராவில் பதிவானது. இதனையடுத்த விசாரணையில் வார்னர், ஸ்மித், பேங்க்கிராப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இம்மூவர் கூட்டணியும் பிறகு ஆஸ்திரேலியாவில் மக்கள் முன்னிலையில் கண்ணீரும் கம்பலையுமாக தவறை ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில் மைக்கேல் கிளார்க்குடன் உறவுநிலை அவ்வளவாக சரியாக இல்லாத மற்றொரு முன்னாள் வீரர் சைமன் கேடிச் மைக்கேல் கிளார்க் கூற்றுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சென் வானொலியில் சைமன் கேடிச் கூறியதாக ஆஸி. ஊடகத்தில் வெளியான செய்தியில் அவர் கூறியதாவது:
“மீண்டும் இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் (கிளார்க்) தவறிழைக்கிறார். இந்த ஒட்டு மொத்த விவகாரத்திலும் மறக்கப்பட்டது என்னவெனில் நாம் வெளிப்படையாக ஏமாற்றினோம் என்பதே. ஏமாற்றும் போது கையும் களவுமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்.
ஆகவே இந்தத் தவற்றை, ஏமாற்று வேலைகளைத் திருத்தி கொண்டு ஆஸ்திரேலிய மக்கள், உலக ரசிகர்களின் ஆஸ்திரேலியா மீதான நல்லெண்ணத்தை மீட்டெடுக்க வேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் ஆக்ரோஷம், ரத்தம், ஆஸ்திரேலிய பாணி என்றெல்லாம் பேசுவது சரியாகாது.
தொடர்ந்து பல ஆண்டுகள் நாம் நம்மை மற்றவர்களுக்குப் பிடிக்காத அணியாகவே நடந்து கொண்டோம். இதன் உச்சகட்டமே கேப்டவுன் பால் டேம்பரிங் விவகாரம் என்பதை நினைவில் கொண்டால் நல்லது” என்று மைக்கேல் கிளார்க்குக்கு பதிலடி கொடுத்துள்ளார்