இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா ஏ அணி லீசெஸ்டர் அணியை 281 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா இருவரும் சதம் அடித்தனர்.
ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி லீசெஸ்டர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா இருவரும் நிதான தொடக்கம் தந்தார்கள். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்தார்கள். அண்டர் 19 கேப்டன் ஆன பிரிதிவி ஷா 132 ரன்கள் எடுக்கையில் ஆட்டம் இழந்தார். இவர் 20 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசினார்.
அதை தொடந்து சுப்மன் கில் அகர்வால் க்கு நல்ல பாட்னர்ஷிப் கொடுத்தார். 106 பந்துகளுக்கு 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியவில்லை. பாதியில் வெளியேறிய அகர்வால் 18 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் விளாசினார். அதன்பிறகு தீபக் ஹூடா கில் க்கு அதிரடியில் உதவினார். முடிவில் கில் 82 ரன்களும் தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
முடிவில் இந்தியா ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 458 ரன்கள் குவித்தது.
459 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லீசெஸ்டர் அணிக்கு துவக்க ஜோடி 44 ரன்கள் சேர்த்தது. தீபக் சஹார் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்தார். 112 ரன்களுக்கே தனது பாதி விக்கெடுகளை இழந்த அந்த அணிக்கு, நன்றாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் டாம் வெல்ஸ் 62 ரன்களில் அவுட் ஆனார்.
இந்திய அணி சார்பில் பிரஷித் கிருஷ்ணா, அக்சர் படேல், சஹார் மூவரும் சிறப்பாக பந்துவீசி எதிர் அணியை 177 ரன்களுக்கு சுருட்டினர். இதனால் இந்தியா ஏ அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.