#ComeBackCSK #BackToChennai எனும் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. காவிரி மட்டுமல்ல, ஸ்டெர்லைட், நியூட்ரினோ என அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
காவிரி விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த 9ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகம், கர்நாடகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதி நீர் பங்கீடு வழக்கின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு செயல் திட்டத்தை வரும் மே 3ம்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதனை பரிசீலனை செய்த பின்னர் பிறகு அதில் இருக்கக்கூடிய திட்டங்களை பற்றி நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என கூறிய நீதிபதிகள், ‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகம், கர்நாடக மாநிலங்கள் அமைதி காக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, கடந்த 10ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியின் போது, வீரர்களை நோக்கி செருப்பு வீசப்பட்டது. ஏராளமான கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஐபிஎல் போட்டியை நடத்தவிட மாட்டோம் என அன்று அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலத்த அச்சுறுத்தலுக்கு இடையே அந்தப் போட்டி நடைபெற்றது.
போட்டி நடந்த 10ம் தேதி, பல இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்திய கட்சிகளோ, ‘இதை நாங்கள் செய்யவில்லை… அந்தக் கட்சி தான் செய்தது.. இந்தக் கட்சி தான் செய்தது’ என குற்றம் சுமத்திக் கொண்டிருந்தன. போட்டி பார்க்கச் சென்ற பெண்களைக் கூட, தரம் தாழ்ந்த நிலையில் விமர்சனம் செய்தனர் சிலர். ஆனால், உண்மையில் அந்த சிலர் போராட்டக்கார்கள் தானா? என்பது தெரியவில்லை. பலரும் உணர்வுடன் போராடிக் கொண்டிருக்க, இது போன்ற நிகழ்வுகள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
போராட்டத்தின் போது போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கேயும், ‘நாங்கள் போலீசாரை அடிக்கவில்லை. அடித்தவர்கள் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது’ என்றே போராட்டம் நடத்திய கட்சிகள் தெரிவித்தன. இறுதியில், பாதிப்பு அடைந்தது என்னவோ, சாமானிய பொதுமக்களும், ஒன்றும் அறியாத கிரிக்கெட் ரசிகர்களும் தான். ஒருக்கட்டத்தில், போராட்டம் காவிரி நீதிக்காக நடைபெறுகிறதா? அல்லது ஐபிஎல்லுக்கு எதிராக நடைபெறுகிறதா? என்றே சந்தேகம் வந்துவிட்டது.
தமிழ் உணர்வுடன் போராடிய போராட்டக்காரர்கள் மத்தியில், அமைதியை சீர் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிலர் உட்புகுந்து இந்த சம்பவங்களை அரங்கேற்றி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து, அவற்றை தமிழகத்தில் இருந்து மாற்றியது, போராட்டத்தின் ஒரு வெற்றியாக பார்க்கப்பட்டாலும், மே 3 வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையப் போவது இல்லை. ஏனெனில், காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பித்த பின்பு தான், காவிரி விவகாரத்தின் அடுத்தக்கட்ட மூவ் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள முடியும். இருப்பினும், காவிரிக்காக போராடும் தமிழர்களுடைய உணர்வின் வீரியத்தை ஐபிஎல் மூலம் மத்திய அரசு உணர்ந்தது என்றே கூறலாம்.
இந்த நிலையில், புனேவுக்கு மாற்றப்பட்டுள்ள சென்னை அணியின் போட்டிகளை மீண்டும் சென்னைக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி #ComeBackCSK #BackToChennai எனும் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
‘ஸ்கோரா? சோறா?’ என்று தங்கள் பேஸ்புக் பக்கத்தில் அலங்கரித்து லைக், லவ் வாங்கிக் குவித்தவர்கள், லட்சக்கணக்கான மக்கள், சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சியை முண்டியடித்து பார்த்த சம்பவத்தைப் பற்றி மவுனம் காப்பது ஏனோ?.