பாகிஸ்தானை அசால்டாக பந்தாடிய இந்திய வீராங்கனைகள்; மிரட்டல் வெற்றி பெற்றது இந்திய மகளிர் படை !!

காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காமென்வெல்த் விளையாட்டு தொடரின் ஒரு அங்கமாக பெண்களுக்கான டி.20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டது. டாஸ் போடுவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் 18ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் முனிபா அலி (31), உமைமா சுஹைல் (10), ஆயிஷா நசீம் (10) மற்றும் ஆலியா ரியாஸ் (18) ஆகிய நான்கு பேரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டமால் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் 99 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரனா மற்றும் ரதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய ஷபாலி வர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார். இதன் மூலம் போட்டியின் 11.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mohamed:

This website uses cookies.