இந்தியாவுக்கு எதிரான செஞ்சூரியன் நகரில் நடைபெற்றுவரும் 2 வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது.
விரட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்களான எய்டன் மார்க்ராமும், டீன் எல்கரும் இன்னிங்க்ஸை தொடங்கினார்கள். இந்த ஜோடி நிதானமாகவும் அதே நேரத்தில் சீராகவும் ரன்களை குவித்து வந்தது. மதிய உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 78 ரன்களை சேர்த்திருந்தனர்.
வேகப்பந்து வீட்டுக்கு மட்டுமல்லாது சுழல் பந்துக்கும் பிட்ச் கை கொடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி 85 ரன்கள் சேர்த்திருந்த போது, அஸ்வின் பந்தில் டீன் எல்கர் வீழ்ந்தார். பந்தை முன்னே சென்று அடித்த போது, பந்து விஜய் மீது பட்டு, அவர் கையில் தஞ்சம் புகுந்தது. அம்லா இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார். மார்க்ராமும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 94 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர் 20 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 82 ரன்கள் எடுத்திருந்த அம்லா இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த குயிண்டான் டி காக்கை டக் அவுட் செய்தார், அஸ்வின். அதைத் தொடர்ந்து வந்த வெரோன் பிலாண்டரும் டக் அவுட்டானார்.