கேப் டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை செஞ்சுரியனில் 2-ஆவது டெஸ்டில் களம் காண்கிறது இந்தியா.
இதனிடையே, அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:
ஒரு தோல்விக்காக நம்பிக்கையை இழக்கக் கூடாது. அப்படி இழந்தால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தகுதியற்றவர்களாகிவிடுவோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். தவறு செய்யாத வீரர் எவருமே கிடையாது.
தென் ஆப்பிரிக்காவில் நான் இதுவரை விளையாடியதில்லை. எனவே, முதல் போட்டியில் கற்றுக் கொண்ட அனுபவத்தின் மூலமாக, 2-ஆவது போட்டியை எதிர்கொள்ள உள்ளேன். எனது முதல் விக்கெட்டாக டி வில்லியர்ஸை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
எனினும், ஒரு பந்துவீச்சாளராக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகு அதிகம் மகிழ்ச்சி அடையாமலும், அதிகம் துவண்டு விடாமலும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும் என்பது எனது மந்திரம்.
அந்நிய மண்ணில் புதிதாக விளையாடும்போது சவாலாகவே இருக்கும். ஏனெனில் ஆடுகளமும், வானிலையும் வித்தியாசமாக இருக்கும்.
அந்த வகையில் புதிய சவால்களை சந்திப்பது நல்லது. அதிகம் விளையாடும்போது, அதிகம் தெரிந்துகொள்ள இயலும். பின்னர் அந்த அனுபவத்தின் மூலம் தகுந்த முறையில் பந்துவீச இயலும்.
முதல் போட்டியை பொருத்த அளவில், முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின்போது நாங்கள் செய்த தவறை உணர்ந்துகொண்டோம். அதை சரி செய்ததாலேயே 2-ஆவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்த முடிந்தது என்று பும்ரா கூறினார்.