இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அணியின் ‘சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஆஸ்திரலேய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் பட்டமாகும்.
இவர்கள் இருவரையும் தவிர்த்து இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், ஓய்வு பெற்ற வீராங்கனையுமான கிளையர் டெய்லரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் சேர்க்கப்பட்ட 5-வது இந்திய அணி வீரர் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன், பிஷன் சிங் பேடி(2009), கபில் தேவ்(2009), சுனில் கவாஸ்கர்(2009), அனில் கும்ப்ளே(2015) ஆகியோர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெறும் 25-வது ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், ’’ஐசிசி அமைப்பு எனக்கு ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் அளித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சாதனையாளர்களுடன் என்னுடைய பெயரும் இடம் பெற்றிருப்பது தலைமுறைகளுக்கும் கடந்து நிற்கும். எந்த ஒருவருக்கும் இந்தப் பட்டம் மிகப்பெரிய பெருமையாகும். இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், அன்பானவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 889 ரன்களையும் குவித்துள்ளார்.