இன்று தொடங்கும் ஓவல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வீரர் அலிஸ்டர் குக் ஓய்வு பெறுகிறார்.
அலிஸ்டர் குக் லாராவின் 11,953 ரன்களைக் கடந்து அனைத்து கால அதிக டெஸ்ட் ரன் வீரர்கள் பட்டியலில் 6ம் இடம் வகிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000, 8000, 9000, 10,000, 11,000, 12,000 ரன்களை விரைவாக எடுத்தவர் என்ற சாதனையைத் தன் வசம் வைத்திருப்பவர்
லாரா சாதனையைக் கடந்த போது அவரிடம் கேட்டனர், “இதை என்னால் விளக்க முடியாது. லாராவுக்காக கொஞ்சம் வருந்துகிறேன்” என்றார்.
59 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடித்ததில் 4 ஆஷஸ் தொடர்களில் 2-ல் வெற்றி பெற்றார், இந்தியாவில் 2-1 என்று வெற்றி பெற்றது அரிய சாதனைகளாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் வெற்றி பெற்ற அந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை அபார உத்தியுடனும் ‘ஸ்வீப்பும்’ செய்து 562 ரன்கள் எடுத்தார். 4 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஆஸி.யில் நடந்த 2010-11 தொடரிலும் குக் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தனது 31வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்தார். அப்போது சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 1 டெஸ்ட் சாதனையான 15,921 ரன்களை குக் முறியடிப்பாரா என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் கூறிய பதில் இதோ:
“ஓ.! அந்தச் சாதனையா? அது பிரமிக்கத்தக்க திறமையுடைய ஜீனியஸ் சாதித்த சாதனையல்லவா. நான் ஜீனியஸ் அல்ல, சச்சின் டெண்டுல்கர்தான் ஜீனியஸ். எனவே அது மிக மிக நீண்ட தொலைவில் உள்ளது.” என்றார்.