அமெரிக்காவிற்கான ஆடப்போகும் நியூசிலாந்து அணியின் கோரி ஆண்டர்சன் ! இந்திய வீரர்களுக்கு வலைவீசும் அமெரிக்க கிரிக்கெட் வாரியம் !
கடந்த பத்து வருடங்களில் கிரிக்கெட் மாபெரும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மேற்கிந்திய நாடுகளில் கிரிக்கெட் மிக அதிகமாக வளர்ந்து விட்டது. ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் நெதர்லாந்து, ஜெர்மனி, பின்லாந்து போன்ற அணிகளும் கிரிக்கெட்டை தற்போது வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல துவங்கி விட்டன.
அதனை தாண்டி உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவும் கிரிக்கெட்டில் கால் பதித்து இருக்கிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அமெரிக்க அணி கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுவிட்டது. இதன் காரணமாக வெகு வேகமாக கிரிக்கெட்டை வளர்க்க அமெரிக்க கிரிக்கெட் வாரியம் திட்டம் தீட்டி வருகிறது.
வீரர்களை வளர்ப்பதைக் காட்டிலும் ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ்பெற்ற மற்ற நாட்டு அணி வீரர்கள் தங்களது நாட்டிற்கு ஆட வைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தை அமெரிக்க கிரிக்கெட் வாரியம் தற்போது முன்னெடுத்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தங்களது சொந்த நாட்டிற்கு விளையாட முடியாத வீரர்களின் பட்டியல் எடுத்து அவர்களின் தேவையான வீரர்களை தங்களது நாட்டிற்காக விளையாட வைக்க முயற்சி செய்து வருகிறது.
நியூசிலாந்து அணியின் கோரி ஆண்டர்சன் 2018ஆம் ஆண்டு கடைசியாக அந்த அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரிலும் தனது நாட்டு அணியிலும் பெரிதாக அவர் விளையாடவில்லை. ஆனால் அவர் மிகப் பிரபலமான வீரர் இதன் காரணமாக அவர்கள் தங்களது அணிக்காக ஆட வைத்தால் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாகும்.
மேலும் இளம் வீரர்கள் இவரை பார்த்து பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள் என்று அமெரிக்க கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க வீரர் சமி அஸ்லம் மற்றும் வங்கதேச அணியின் சில வீரர்கள் இலங்கை அணியின் சில வீரர்கள் ஆகிய பலரையும் தனது அணிக்காக ஆட வைக்க அமெரிக்க கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வுபெற்ற வீரர்களை வெளிநாட்டு அணிகளுக்கு அல்லது வெளிநாட்டு t20 அணிகளுக்கு ஆடுவதற்கு அனுமதி அளிக்கிறது. இதன் காரணமாக ஓய்வு பெற்ற வீரர்களான யுவராஜ் சிங், இர்பான் பதான், முகமது கைஃப், பிரவீன்குமார், மனோஜ் திவாரி போன்ற வீரர்களையும் இந்தத் திட்டத்தில் வைத்திருப்பதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எத்தனை வீரர்களை தனது அணியில் விளையாட வைக்கிறது என்று.