இனி இப்படி செய்ய வேண்டாம்; பந்துவீச்சாளர்களுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்துள்ளார் புவனேஷ்வர் குமார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வியாழனன்று தரம்சலாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெள்ளைப்பந்தை பளபளப்பேற்ற வீரர்கள் உமிழ்நீரைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகம் முழுதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து உமிழ்நீரைப் பந்தில் பயன்படுத்துவது ஆபத்தானதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது,
இது தொடர்பாக இந்திய ஸ்விங் பவுலர் புவனேஷ்வர் குமார் கூறியதாவது:
எச்சிலைப் பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதைப் பற்றி பரிசீலித்து வருகிறோம். எச்சிலைப் பயன்படுத்தாவிட்டால் பந்துகள் ஸ்விங் ஆகாது, பிறகு நாங்கள் அடி வாங்குவோம், நாங்கள் சரியாக வீசவில்லை என்று நீங்கள் கூறுவீர்கள். எனவே பந்தின் பளபளப்பைக் கூட்ட எச்சிலைப் பயன்படுத்துவோமா இல்லையா என்பது பற்றி நான் இப்போது எதுவும் கூற முடியாது.
ஆனால் கரோனா காலத்தில் இந்தக் கேள்வி முக்கியமானது, ஒரு அணியாக இது குறித்து பரிசீலிப்போம். இது பற்றி மருத்துவர்கள் ஆலோசனையின் படி செயல்படுவோம்.
கரோனா நிலவரம் இந்தியாவில் ஆபத்தான நிலையில் இருப்பதால் ஐபிஎல் விளையாடுவோமா இல்லையா என்பது குறித்து இப்போதைக்கு ஏதும் கூற முடியவில்லை. ஆனால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுத்து வருகிறோம். அணி மருத்துவர் இருக்கிறார், அவர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாரோ அதன்படியே நடப்போம். இவ்வாறு கூறினார் புவனேஷ்வர் குமார்.