இவர் மட்டும் இல்லைனா விராட் கோஹ்லி காணாம போயிருப்பார்; கம்பீர் சொல்கிறார்
இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கான பாராட்டும் தோனியையும் சாரும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, நிகழ்கால கிரிக்கெட் உலகின் நம்பர் 1 வீரராக திகழ்ந்து வருகிறார். எதிலுமே குறை சொல்ல முடியாத அளவிற்கு டெஸ்ட், டி.20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் மாஸ் காட்டி வருகிறார்.
மூன்றுவிதமான போட்டிகளிலும் சுணக்கமே இல்லாமல் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வரும் விராட் கோலி, ஆல்டைம் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்தியாவில் மட்டுமல்லாது, இந்தியாவிற்கு வெளியேயும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலகம் முழுதும் சிறப்பாக ஆடி ரன்களை குவிக்கிறார்.
இன்றைக்கு சாதனையாளராக திகழும் கோலியின் கிரிக்கெட் கெரியரிலும் தொய்வு ஏற்பட்டது. ஆம்.. 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் விராட் கோலியின் கிரிக்கெட் கெரியரில் படுமோசமான தொடராக அமைந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்திடம் இந்தியா இழந்தது.
அந்த தொடரின் அனைத்து போட்டியிலும் கடுமையாக சொதப்பிய விராட் கோஹ்லி, மொத்தமாக ஐந்து போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த சொதப்பல் ஆட்டத்தால் கோஹ்லிக்கு இனி இந்திய அணியில் இடமே கிடைக்காது என்று பேசப்பட்ட நிலையில், அப்போதைய கேப்டனான தோனி கோஹ்லியை அணியில் இருந்து நீக்காமல் அவருக்கு அடுத்தடுத்த தொடர்களிலும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் கம்பீரும், விவிஎஸ் லட்சுமணனும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அடைந்த பரிணாம வளர்ச்சியை பற்றி பேசினார்கள்.
அப்போது, 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றவர் என்ற முறையில், கோலிக்கு தோனி அளித்த ஆதரவை நன்கு அறிந்த கம்பீர், இன்று கோஹ்லி தலைசிறந்து விளங்குவதற்கான கிரெடிட் முன்னாள் கேப்டன் தோனியையே சேரும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய கம்பீர், 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நானும் தான் இருந்தேன். அந்த தொடரில் கோலி சரியாக ஆடாதபோதும், அவருக்கு ஆதரவாக இருந்தார் தோனி. மொத்த கிரெடிட்டும் தோனியையே சேரும். ஏனெனில் அந்த சுற்றுப்பயணத்துடன் நிறைய வீரர்களின் டெஸ்ட் கெரியரே முடிந்துவிட்டது. ஆனால் கோஹ்லிக்கு முழு பாதுகாப்பளித்து அவருக்கு ஆதரவாக இருந்தார் தோனி என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.