உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இப்போதே திட்டம் வகுத்து வரும் ஆஸ்திரேலியா அணியை பார்த்தாவது பிசிசிஐ திருந்துமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டிகள்(2021-2023) முடிவடைந்து புள்ளிப்பட்டியல் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் பைனலுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் முறையே பிடித்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.
பைனல் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே ஒருமுறை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்று நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத்தழுவி பரிதாபமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இம்முறை அதுபோன்று நடந்துவிடக்கூடாது என்ற முனைப்பு காட்டாமல், வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்று வருகின்றனர். பிசிசிஐ நிர்வாகமும் இன்னும் அணியை அறிவிக்காமல் இருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக சாடுகின்றனர்.
அதற்குள் முந்தி கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பைனல் நடைபெறுவதற்கு சரியாக இன்னும் 50 நாட்கள் இருக்கையில் ஆஸ்திரேலிய அணியை அறிவித்திருக்கிறது. அப்படியே ஆஷஸ் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடுவதால், அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியையும் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் சிலர் உடல்நிலையை பராமரிக்கும் நோக்கில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்து, பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்திய வீரர்களோ முழுக்க முழுக்க ஐபிஎல் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டி பிசிசிஐ மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
17 பேர் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் வீரர்கள் பட்டியல்:
மிச்சல் மார்ஸ், ஜோஸ் இங்கிலிஷ் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய மூன்று பேரும் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். பல்வேறு காயங்கள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்த மிட்ச்சல் மார்ஷ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஜோஸ் இங்கிலீஷ் மற்றும் ஹாரிஷ் இருவரும் ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித்(துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்