ஐசிசி நிர்வாக விவகாரங்களில், நிதி உள்ளிட்ட விவகாரங்களில், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாட்டு வாரியங்களே ஆதிக்கம் செலுத்தி வருவதன் இன்னொரு பரிதாபகரமான விளைவுதான் அயர்லாந்து இன்று சந்தித்து வரும் பிரச்சினைகளுமாகும்.
நிதிப்பற்றாக்குறையினால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றை டி20 போட்டியாகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இரண்டையும் ரத்து செய்துள்ளது.
ஜூன் 2017-ல் ஆப்கானிஸ்தானுடன் அயர்லாந்துக்கும் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டு ஐசிசியின் முழு உறுப்பினர் தகுதியை எட்டியது.
இந்நிலையில் இந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டது குறித்து கிரிக்கெட் அயர்லாந்து தலைமை செயல் இயக்குநர் வாரன் டியூட்ரம் கூறியதாவது, “ஐசிசி முழு உறுப்பினரான பிறகு கூட வாரியத்தின் நிதி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த வலுவான அணியை உருவாக்குவது அவசியம். அதற்கு நிறைய முதலீடு தேவைப்படுகிறது. நிரந்தர உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகிறது, டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்துவதற்கான நிதி ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை.
அதனால் உள்நாட்டுத் தொடர்களை குறைக்கவும் ரத்து செய்யவும் நேரிடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி இடம்பெறாததால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
ஒரு டெஸ்ட்டை நடத்த 10 லட்சம் யூரோக்கள் தேவைப்படும். இதனை திரட்ட இப்போதைக்குச் சக்தியில்லை.” என்றார்.
இதனையடுத்து ஜிம்பாப்வே கிரிக்கெட்டை அழிவுப்பாதைக்குச் செல்ல ஐசிசி தற்போது அயர்லாந்தை டெஸ்ட் சாம்பியன்ஷிப்களில் இடம்பெறாமல் செய்ததன் மூலம் அதன் கிரிக்கெட்டையும் அழித்துவிடுமோ என்ற அச்சம் அயர்லாந்து தரப்பில் எழுந்துள்ளது.