போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப், துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து அவர் வேறு விமானத்தைப் பிடித்து கராச்சி திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்தவர் முகமது ஆசிப். ஸ்பாட் பிக்சிங் விஷயத்தில் சிக்கிய முகமது ஆசிப், 2010 முதல் 2015 வரை கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டார்.
மேலும் 2008-ம் ஆண்டின்போது இவர் துபாய் விமான நிலையத்தில் ஓப்பியம் போதைப் பொருளுடன் பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஆசிப், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்காக முகமது ஆசிப் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கான விசாவும் அவரிடம் இருந்தது. இதையடுத்து துபாய்க்கு, கராச்சியிலிருந்து விமானத்தில் நேற்று கிளம்பினார் ஆசிப்.
அவர் துபாய் சென்றதும், ஐக்கிய அரபு அமீரக குடியேற்றப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவர் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வேறு விமானம் மூலம் அவர் துபாயிலிருந்து கராச்சி திரும்பினார். இதுகுறித்து ஆசிப் கூறும்போது, “நான் அனைத்து ஆவணங்களையும் கொண்டு சென்றிருந்தேன். ஆனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் அனுப்பியிருந்த ஒரு ஆவணத்தை எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். இதனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அந்த ஆவணத்தை அனுப்புவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.