நம்ப வைத்து மும்பை அணியை ஏமாற்றிய ஐந்து அதிரடி வீரர்கள்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்க உள்ளது.
ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் நடத்தப்படுவது வழக்கம். ஏலத்தின் போது தங்களது அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் கடுமையாக போட்டி போடும். அவ்வாறு ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு பல கோடிகளை கொட்டி எடுக்கும் சில வீரர்களை தவிர பெரும்பாலான வீரர்கள் தன்னை நம்பி அணியில் எடுத்த அணிக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், மும்பை அணியால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு அந்த அணிக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
5 – ஷிகர் தவான்
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் ஷிகர் தவானை கடந்த 2009ம் ஆண்டு தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 2009 மற்றும் 2010ம் ஆண்டு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஷிகர் தவான் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார்.
4 – ரிக்கி பாண்டிங்
கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ம் ஆண்டுக்கான தொடரில் தனது அணியில் எடுத்தது. அந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரிக்கி பாண்டிங் வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்து, தன்னை நம்பிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக கொடுத்தார். ரிக்கி பாண்டிங் விளையாடிய கடைசி ஐ.பி.எல் தொடரும் இதுவே.
3- கிளன் மேக்ஸ்வெல்
அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவரான ஆஸ்திரேலிய அணியின் கிளன் மேக்ஸ்வெல் மீது அதீத நம்பிக்கை வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ம் ஆண்டுக்கான தொடரில் தனது அணியில் இணைத்து கொண்டது. அந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.
2 – யுவராஜ் சிங்
கடந்த 2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை, கடைசி நேரத்தில் யுவராஜ் சிங்கை அவரது அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. 2019ம் ஆண்டுக்கான தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் மட்டுமே யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஆனால் யுவராஜ் சிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.
1 – டூவைன் பிராவோ;
சென்னை அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வரும் டூவைன் பிராவோவை முதல் ஐ.பி.எல் தொடரில் எடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணி தான். 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, மொத்தம் தான் விளையாடிய 30 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அதே போல் மூன்று தொடரிலும் சேர்த்தே 457 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.