கேரளாவில் நடந்த கோர விமான விபத்து சம்பவம்; சச்சின், கம்பீர் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் வெளியிட்ட கருத்து!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த கோர விமான விபத்திற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது வருத்தங்கள் மற்றும் இரங்கல்களை தெரிவித்திருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர “வந்தே பாரத்” என்னும் திட்டம் மூலமாக விமானம் மூலம் இந்தியா கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதே திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 7ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் வந்த விமானம் ஒன்று சுற்றுச்சூழல்/மழை காரணமாக ஓடுதளத்தில் நிற்காமல் அருகிலிருந்த 30 அடி பள்ளத்தாக்கில் கீழே விழுந்தது. இதனால் விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது.
இந்த சம்பவத்தில் விமானி மற்றும் துணை விமானி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் விபத்திற்கு உள்ளாகி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர். இன்னும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயணிகள் உயிரிழப்புகள் குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
ஏற்கனவே நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கேரளாவில் 7ஆம் தேதி இந்த விமான விபத்து உட்பட கொரானா வைரஸ் மற்றும் இன்னும் சில காரணங்களுக்காக சுமார் 47 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இத்தகைய பெரும் விபத்திற்கு பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வருத்தங்களை மற்றும் இரங்கல்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை நாம் இங்கு காண்போம்.