அடுத்த ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் தோனியே வழிநடத்துவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்காக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் படு மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக இந்த தொடரில் மிக மட்டமான தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்ததால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் கடும் விமர்ச்சனத்திற்கும் உள்ளாகியது.
தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சீனியர் வீரர்கள் அனைவரும் கழட்டிவிட்டு விட்டு அடுத்த வருடம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனால் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா, விளையாடினாலும் சென்னை அணியை வழிநடத்துவாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்த வருடமும் தோனியே வழிநடத்துவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியையும் தோனியே வழிநடத்துவார் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். தோனி சென்னை அணிக்காக மூன்று சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது இதுவே முதல் முறை, மற்ற எந்த அணியும் இத்தனை முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த வருடம் மோசமானதாக அமைந்துவிட்டதால் அத்தனையையும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பேசிய காசி விஸ்வநாதன், “இந்த வருடம் நாங்கள் சரியாக விளையாடவில்லை, நாங்கள் வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கூட தோல்வியடைந்துவிட்டோம். அதுவே எங்களது இந்த நிலைமைக்கு காரணம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகியதும், தொடர் துவக்கத்தில் அணியின் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துவிட்டது” என்றார்.