ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பலம் மிக்கதாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
இந்தியாவில் சுமார் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. பலவித ஏற்பாடுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க இருக்கிறது. துரதிஸ்டவசமாக இந்தியாவில் நடத்த முடியாததால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் பலர் துபாய் மற்றும் அபுதாபி சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக துபாய் மற்றும் அபுதாபி வந்தடைவர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, கொரோனா பரிசோதனை நடத்தப்படும் அதன் பிறகு, இவர்கள் அனைவரும் இயல்புநிலை பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் குறித்தும், தனிப்பட்ட வீரர்கள் மற்றும் அணிகள் என யார் யார் சிறப்பாக செயல்படுவார் என்பது குறித்தும் பல முன்னாள் வீரர்களும், பயிற்சியாளர்களும், வர்ணனையாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் அளித்த பேட்டியில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அனுபவம் மிக்க வீரர்களை கொண்டு இருக்கிறது. அதுவே அந்த அணிக்கு பலமாகவும் இருக்கிறது. குறிப்பாக தோனி, வாட்சன், டு பிளசிஸ், ராயுடு என பல அனுபவமிக்க வீரர்கள் பேட்டிங் வரிசையில் இருப்பதால் பலம் மிக்கதாக காணப்படுகிறது.
அதேநேரம் கீழ் வரிசையில் ஜடேஜா, பிராவோ ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடுபவர்கள் என்பதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர்களின் பேட்டிங் வரிசை மற்ற அணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என நான் கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் அணிகளின் பேட்டிங் பலத்தைப் பொறுத்து வரிசைப்படுத்தி இருந்தார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் இடத்தையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாவது இடத்தையும், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களையும் கொடுத்திருந்தார்.
மேலும், கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு அடுத்தடுத்த கீழ் வரிசைகளை கொடுத்திருந்தார்.