சென்னை அணியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி; மிகப்பெரும் பின்னடைவு !!

சென்னை அணியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி; மிகப்பெரும் பின்னடைவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஒருவர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்க உள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் யுனைடெட் அராப் எமிரேட்ஸில் இந்த வருடத்திற்கான தொடர் நடக்க உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே ஒவ்வொரு அணி வீரரும் ஐந்து முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் துபாய் செல்வதற்கு முன்பு இந்தியாவிலேயே ஒவ்வொரு வீரரும் மூன்று முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின்னே துபாய் அழைத்து செல்லப்பட்டனர்.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர், உதவியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் என மொத்தம் 60 பேருடன் தனி விமானத்தில் துபாய்க்கு சென்றது. துபாய்க்கு சென்றதுமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.

அதில், ஒரு மிதவேகப்பந்து வீச்சாளர், அணி உதவியாளர், அணி நிர்வாகத்தின் சீனியர் அதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றுள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

மறுபுறம் இந்த தகவல் உண்மையில்லை என்றும் ஐ.டி.,விங்கை சேர்ந்த சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானதாகவும், சென்னை அணியை சேர்ந்த எந்த வீரருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ, ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் வீரர்கள் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் மேலும் அதிகரிக்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தான் வீரர்கள் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.