சிஎஸ்கே அணியின் தோனி, ரெய்னா போன்ற முன்னணி வீரர்கள் விரைவில் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறக்கக்கூடிய தொடராக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்க்கப்படாததால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் இயல்பான ஒன்றைப்போல நடைபெறாது என்றும், அந்தந்த அணி வீரர்கள் தங்களது சொந்த மைதானங்களில் ஒரு போட்டி கூட விளையாட முடியாது என்கிற பாணியிலும் அட்டவணைகள் தயார் செய்திருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
உதாரணமாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றாலும், அதில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாது; அதேப்போல மும்பை அணி தங்களது சொந்தமான வான்கடே மைதானத்தில் ஒரு போட்டி கூட விளையாட முடியாது என்கிற வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. வருகிற ஐபிஎல் தொடர் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு மைதானங்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி பேசுகையில், “தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி, ராயுடு, ருத்துராஜ் மற்றும் விரைவில் இணையவிருக்கும் ரேய்னா ஆகியோர் இன்னும் சில நாட்களில் மும்பை செல்ல இருக்கிறார்கள்.” என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக மும்பை மைதானத்தில் ஐந்து லீக் போட்டிகளிலும், டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களில் முறையே 4, 3 மற்றும் 2 லீக் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே விரைவில் சென்னையிலிருந்து தோனி, ரெய்னா போன்ற முன்னணி வீரர்கள் செல்லவிருப்பதாக நிர்வாகத்தின் தகவல்கள் வெளிவருகின்றன.