வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்; சி.எஸ்.கே தலைமை பயிற்சியாளர் !!

வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்; சி.எஸ்.கே தலைமை பயிற்சியாளர்

புனே ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்கு உள்ளூர் சாதகங்களை வழங்க அந்த அணி இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டும் என்று கூறும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இறுதி ஓவர்களை இன்னும் சீரான முறையில் வீச வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

தீபக் சாஹர் புதிய பந்தில் நன்றாக வீசுகிறார், அவரும் தற்போது காயமடைந்துள்ளார், ஷர்துல் தாக்கூர் சீரான முறையில் வீச தடுமாறி வருகிறார். டிவில்லியர்ஸ், கேன் வில்லியம்சன், யூசுப் பத்தான் போன்றோர் அவரை சிறந்த முறையில் பதம் பார்த்தனர், எனவே டிவைன் பிராவோவை நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால் அவரும் வீழ்ச்சிக்குரியவர்தான்.

அதே போல் தோனியை வீழ்த்தி விட்டால் பிறகு சென்னை இறுதி ஓவர்களில் ரன் எடுக்கத் திணறுவதையும் அன்று பார்த்தோம். இந்த இரண்டு விவகாரங்களையும் சரிகட்ட பயிற்சியாலர் பிளெமிங் வலியுறுத்தியுள்ளார்.

“தோல்வி நம்மை அச்சுறுத்தி விடக்கூடாது. இங்கு (புனே) பிட்சை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது சென்னை அல்ல. சென்னை பிட்சுக்கு தோதாக இருக்குமாறு அணியைத் தேர்வு செய்து வருகிறோம், எனவே எவரைப்போலவும் நாங்களும் இங்கு கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

எனவே இங்குள்ள நிலைமைகளைப் புரிந்து கொண்டு அனுசரிக்க கூடுதல் உழைப்பு தேவை. சரியான அணிச்சேர்க்கையை இந்த ஊருக்குத் தக்கவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

அதே போல் இறுதி ஓவர்களை வீசுவதில் சீரான தன்மை வேண்டும் என்பதை வலியுறுத்திய பிளெமிங், “தாக்கூரை ஸ்லாக் ஓவர்களுக்கான பவுலராகவே பார்த்தோம். இந்திய அணிக்கு அவர் இந்த பங்கையாற்றியுள்ளார். தீபக் சாஹர், தாக்கூர் இருவருக்கும் பெரிய சவாலே சீரான முறையில் இறுதி ஓவர்களை வீச வேண்டுமென்பதே.

ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சு கவலையளிக்கிறது. இறுதி ஓவர்களில் அவர் சீராக வீசுவதில்லை. அவர் திட்டங்களை சரியாக்க நாங்கள் கடினமாக அவருடன் பணியாற்றி வருகிறோம்.

மேலும் 2 பவுலர்களை இறுதி ஓவர்களுக்காகத் தயார் படுத்த வேண்டும். தாக்குர் மட்டுமேயல்ல. நாம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உடனுக்குடனே அணியை விட்டு தூக்குவது பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல.

அனைத்து காரணிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு மாற்றம் பற்றி சிந்திப்போம்” என்றார் ஸ்டீபன் பிளெமிங்.

Mohamed:

This website uses cookies.